Showing posts with label நபிமார்கள் வரலாறு. Show all posts
Showing posts with label நபிமார்கள் வரலாறு. Show all posts

Tuesday, 3 August 2010

தொடர் 2 ..........

நபித்துவம் இறைவனின் நியமனம்
Rasmin Misc

நபித்துவம் என்பது இறைவனின் பாக்கியமாகும். மற்ற மதங்களின் கருத்துக்களைப் போல் இஸ்லாமிய மார்கத்தில் யாரும் பக்தியால் நபியாக மாற முடியாது.

முனிவர்களைப் போல் காடுகளிலும் மலைகளிலும் தங்கியிருப்பதால் ஒன்றும் அவர்கள் இறைவனின் நபியாக அங்கீகரிக்கப் படமாட்டார்கள்.

அது போல் வயதின் அடிப்படையில் கல்வியின் அடிப்படையில் குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் என்று எந்த அடிப்படையும் இதற்கு இல்லை.

நபித்துவத்திற்கு இருக்கும் ஒரே அந்தஸ்து இறைவன் யாருக்கு விரும்புவானோ அவர்களுக்கு அந்தத் தகுதியை அந்தஸ்தை வழங்குவதுதான்.

அந்த அந்தஸ்தைப் பெருபவர் சிறுவராகவும் இருக்கலாம்

பெரியவராகவும் இருக்கலாம் வயோதிகராககவும் இருக்கலாம். இறைவனின் நாட்டம் தான் முக்கியம்.

இதை இறைவன் தனது திருமறையில் தெளிவாக அறிவித்துத் தருகிறான்.
நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

யஹ்யா ஈஸா (அலை)ஆகியவர்களை அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே நபியாக நியமிக்கிறான்.

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்) சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம்(19:12)

வேதம் வழங்கப்படுவதும் ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில் தான் என்று கூறி நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சிலர் சித்தரிக்கின்றனர்.

யஹ்யா நபியவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறக்கிறார்கள் சிறுவராக இருக்கும் போதே அவருக்கு வேதத்தைக் கொடுத்து விட்டான் என இவ்வசனம் (19:12) கூறுகிறது.

உடனே அவர் (அக்குழந்தை)நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான் நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான் என்னை துர்பாக்கிய சாலியாகவும் அடக்குமுறை செய்பவனாக வும் அவன் ஆக்கவில்லை.(19:30.31.32)

மேலும் 19:30 வசனத்தில் ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனேயே தம்மை இறைவன் தூதராக நியமித்து வேதத்தை வழங்கியதாகக் கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபியாக நியமிக்கப்படுவதற்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகும்.

முஹம்மது நபிக்கு விதிவிலக்கா?

சிலர் நபியாவதற்கு இறைவனின் நாட்டம் தான் முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மாத்திரம் இதில் விதிவிலக்குப் பெற்றவர்கள் என்று வாதிடுவர்.

ஆனால் நபியும் அதற்கு விதிவிலக்கல்ல.நபி(ஸல்)அவர்கள் ஒன்றும் பிறப்பிலிருந்து நபியல்ல அவர்களுக்கும் தான் நபியாகும் வரை அதைப்பற்றிய எந்த செய்தியும் தெரியாது.

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்(93:7)

மேற்கண்ட வசனத்தில் நபியவர்கள் பிறப்பில் நபியில்லை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இறைவன் அவர்களை நபியாக ஆக்கினான் என்பது தெளிவாகிறது.

ஆக இறைவன் நபி(ஸல்)அவர்கள் பற்றி என்ன திருக்குர்ஆனில் கூறியுள்ளானோ அதைத் தான் நாம் கூற வேண்டுமே தவிர நாமாக வரலாறு என்ற பெயரில் எதையும் சொல்லக் கூடாது.

நபிமார்களைப் புரியும் மூன்று முறைகள்.
1.தோற்றத்திலும்(புறத்தோற்றம்)அவர்கள் மனிதர்கள்.
2.அகத்தோற்றத்திலும் அவர்கள் மனிதர்கள்.
3.ஆற்றலிலும் அவர்கள் மனிதர்கள்.

நபிமார்களும் மனிதர்களே!

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும் அதிகாரத்தையும் நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்! என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும் அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!(என்றே நபி கூறுவார்.)(3:79)

மக்களை எச்சரிப்பீராக என்றும் நம்பிக்கை கொண்டோருக்கு தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? இவர் தேர்ந்த சூனியக்காரர் என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்(10:2)

எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம் என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.(11:27)

வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும் குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவை களை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!" என்று அவர்கள் கேட்டனர்.(14:10)

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்" என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.(14:11)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும் ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம் நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள் மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்(16:43)

மேலும் படிக்க 17:93.17:94.18:110. 21:3 போன்ற வசனங்களை பார்க்கவும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்……………..
Read more » 0 comments

Sunday, 1 August 2010

தொடர் 1….

நபிமார்கள் வரலாறு
Rasmin M.I.Sc

அன்பின் இணையத்தள வாசகர்களே!

நபிமார்கள் வரலாறு என்ற இந்தத் தொடரின் மூலம் நாம் ஆதம் நபி முதல் நமது ஆருயிர் நபி(ஸல்)அவர்கள் வரை அனைவரைப் பற்றிய வரலாற்றையும் திருக்குர்ஆன் ஆதாரப் பூர்வமான நபிமொழி அடிப்படையில் ஆராய இருக்கிறோம்.

இது
தவிர்ந்த எந்தக் கட்டுக் கதையும் இதில் இடம் பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம், வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு.

இவையணைத்தையும் சரியான முறையில் அறிந்து கொள்ள நமக்கு எந்த ஆவணக்களும் கைவசம் இல்லை.

அது போல் பலங்கால கல்வெட்டுகளோ அல்லது வேறு எந்த ஆதாரமோ நம்மிடம் இல்லை அப்படியென்றால் இந்த வரலாறுகளை நாம் எப்படி அறிந்து கொள்வது?

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபியவர்களும் கூறிய கருத்துக்களை மாத்திரம் வைத்துத் தான் நாம் நபிமார்களுடைய வரலாறுகளை ஆராய முடியும்.

இந்த இரண்டு வழிமுறை தவிர்ந்த எந்த வழி முறையை நாம் கையாண்டாலும் அதில் பெரும்பாலும் பொய்யும் இட்டுக் கட்டும் தான் கலந்திருக்கும் ஆதலால் இந்தத் தொடர் திருமறைக் குர்ஆணையும் ஸஹீஹான நபி மொழிகளையும் மாத்திரம் வைத்தே தொகுக்கப் படுகிறது.

நபிமார்கள் என்றால் யார்?

மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான்.இவ்வாறு அனுப்பப் படுவோரை இறைத்தூதர்கள் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.

முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதர் நபிகள் நாயகம் வரை ஏறாளமானவர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பல்வேறு மொழி பேசுபவர்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.இவ்வாறு அனுப்பப் பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ ஆதாரப் பூர்வமான நபிமொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.

தூதர்களாக அனுப்பப் படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக அனுப்பப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படாது. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அவர்களுக்குறிய முக்கிய சிறப்பம்சமாகும்.

நபிமார்கள் என்பதும் தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகள் உடையது எனச் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்து எந்தவித ஆதாரமும் அற்றதாகும்.
நபியும் ரசூலும் ஒன்றே!

நபியும் ரசூலும் ஒன்றே என்பதற்கு ஆதாரமான திருமறை வசனங்கள்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர் இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும் அவர்கள் மீது (பிணைக் கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி இவரைக் கண்ணியப்படுத்தி இவருக்கு உதவியும் செய்து இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர் (7:157)

'மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான் மரணிக்கச் செய்கிறான் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும் அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தை களையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள் (7:158)

இந்த நபிக்குத் தொல்லை தருவோரும் அவர்களில் உள்ளனர். காதில் கேட்பதையெல்லாம் இவர் நம்புபவர் என்றும் கூறுகின்றனர். உங்களுக்கு நன்மை தருபவற்றை அவர் கேட்கிறார். அல்லாஹ்வை நம்புகிறார். நம்பிக்கை கொண்டோரின் கூற்றை நம்புகிறார். உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அருளாக இருக்கிறார் என்று கூறுவீராக! அல்லாஹ்வின் தூதரைத் தொல்லைப்படுத்துவோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு .(9:61)

இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப்பட்டவராகவும் தூதராகவும் நபியாகவும் இருந்தார். (19:51)

இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும் தூதராகவும் நபியாகவும் இருந்தார். (19:54)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நபியும் ரசூலும் ஒன்றுதான் வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

ஆனால் நபியும் ரசூலும் வேறு வேறு என்று சொல்பவர்கள் அதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தை முன் வைக்கிறார்கள் அது பற்றி ஆராய்வோம்.

(இது தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்கள் தனது திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் விளக்கம் பகுதியில் கொடுத்துள்ள ஆய்வையே நாமும் இங்கு குறிப்பிடுகிறோம்.)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும் தூதரானாலும் அவர் ஓதும் போது அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும் கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்குவதற்காக அதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன் ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர். (22:52,53)

இவ்வசனத்தில் நாம் அனுப்பிய எந்த நபியானாலும் எந்தத் தூதரானாலும்... என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது. நபியும் ரசூலும் ஒன்றல்ல வௌ;வேறானவை எனக் கூறுவோர் இதை ஆதாரமாகக் காட்டுவார்கள்.

இரண்டும் ஒன்று தான் என்பதற்குரிய சான்றுகளை பொருள் அட்டவணையில் நபிமார்கள் என்ற தலைப்பில் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே அவற்றுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.

இதை அப்படியே பொருள் கொண்டு நபி வேறு ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.

மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி தனித் தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர் மறையாகப் பேசும் போது அது அதிக அளவில் காணப்படுகிறது. அரபு மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.எனக்கு எந்தக் கூட்டாளியும் நண்பனும் வேண்டாம்.எனக்கு எந்தச் சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை இரு கருத்துக்களைப் போல் பயன்படுத்துகிறோம். அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங்களுடன் பொருந்திப் போகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும் .............................
Read more » 0 comments

ஆயிஷா மைந்தன்