Monday, 20 September 2010

1. மக்கள் தொகை

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் நாடு முழுவதும் தொடங்கி உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மக்களை எந்த அளவுக்குச் சென்றடைந்துள்ளது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பே அடிப்படையாகக் கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் கல்வி, தொழில், திருமணம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றை அவனது பிறப்பே தீர்மானித்து வந்திருக்கிறது. இந்தியா குடியாட்சியாக மாறிய பின்னும் இந்த அவலம் மாறவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் நாட்டின் அனைத்து வளங்களையும் பங்கிட்டு, சமூக சமத்துவமின்மை நிலவி வந்த இந்தியாவில், அனைத்து பிரிவு மக்களும் நாட்டின் உயர் அதிகாரங்களில் சம நிலையில் உயர்ந்து வந்தாலே சமூக சமத்துவம் நிலவி, இந்தியா ஒருங்கிணைந்து முன்னேறும் என்பதைக் கண்டு கொண்டு, பின் தங்கிய நிலையிலுள்ள பிரிவினர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது.

சமூக அந்தஸ்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு, இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்குகள் வரும் போதெல்லாம் அந்தப் பிரிவினர் மக்கள் தொகையில் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று நீதி மன்றங்கள் கேட்கின்றன. ஆனால் அப்படிக் கேட்கிற ஒரு நீதிபதிக்குக் கூட சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடத் தோன்றவில்லை என்பது வேதனையான ஒன்று.

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப்பட்டு வருகிறது. 1881ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை சாதிவாரியாகவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

1941
ஆம் ஆண்டு உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாடு விடுதலை பெற்ற பின் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்புக்கு அடிபணிந்த ஜவஹர்லால் நேரு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்துவதற்கு உடன்பட்டார். அதன்பிறகு நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் சாதிவாரியாக எடுக்கப்படவில்லை.

இடஒதுக்கீட்டை எதிர்க்கும் சமூக அந்தஸ்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடரும் போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சரியான தொகையைக் குறிப்பிட இயலாமல் மத்திய அரசு தடுமாறி உள்ளது. இதுவரை 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பையே நீதிமன்றங்களில் குறிப்பிட வேண்டி வந்தது.

இத்தகைய தடுமாற்றங்களை உணர்ந்த மத்திய அரசு (தற்போது) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இதுகுறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படும் என்றும் எந்த வகையில் மேற்கொள்ளப்படும் என்பதை மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்றும் அறிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசிய முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தற்போது தமது கருத்தை மாற்றிக் கூறத் தொடங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய இதழான ஆர்கனைசர் இதழில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராக எழுதியதைத் தொடர்ந்து, பாஜகவும் தன் குரலை மாற்றத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில், "சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான பிரச்னையில், பா.ஜ.க, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் பாபுராவ் வைத்யா, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பாஜக கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று மறைமுகமாக நெருக்குதலைக் கொடுத்துள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முன்னேற்றத்திற்கு எதிரானதுப்; பிரிவினைக்கு வழி வகுக்கும் என்று தாம் கருதுவதாக பாஜக தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியும் கூறியுள்ளார். பாஜக இது விசயத்தில் விவாதித்து உறுதியான நிலையை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சாதியையும் சாதி ஆதிக்கத்தையும் ஒழிக்க முடியாத, ஒழிக்க விரும்பாத சக்திகள் சாதிக் கணக்கெடுப்பை மட்டும் ஒழிக்க வேண்டும் என்று கோருவதன் சூட்சுமம் என்னவென்று தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று கோருவது சாதியைக் காப்பாற்றுவதற்காக அன்று; மாறாக சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால்தான் பெற முடியும் என்பதாலேயே. நாட்டின் விடுதலைக்கு முன்னர் வரை, மிருகங்களுக்குக் கொடுக்கும் உரிமையினைக் கூட கொடுக்காமல் பிறப்பின் அடிப்படையில் எடுபிடிகளாக மாற்றி வைக்கப்பட்டிருந்த சாதியினர், ஒருநாளும் நாட்டின் உயர் அதிகாரங்களில் வந்தடைந்து விடக்கூடாது என்ற நோக்கில், பரம்பரை பரம்பரையாக நாட்டின் உயர் அதிகாரங்களை ஆண்டு அனுபவித்து வரும் உயர் சாதியினர் முன் வைக்கும் எத்தகைய சொத்தை காரணங்களுக்கும் மசிந்து விடாமலும் விலையற்ற எதிர்ப்புகளுக்கு அஞ்சாமலும் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்.

Read more »

0 comments:

Post a Comment

Copyright © 2010 ஆயிஷா மைந்தன்

Template By Nano Yulianto | Page Navigation Abu Farhan