Sunday 22 August, 2010

இன்டர்நெட் அபாயம்



இன்டர்நெட் அபாயம்


பன்னெடுங் காலமாக உலக மக்கள் அனைவரும் தங்களின் தகவல்களை கடிதம் மூலம் பரிமாறிக் கொண்டனர். கடிதத்தின் மூலம் தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து, சுக துக்கங்கள், நலம் விசாரிப்பது போன்ற செய்திகளை பறிமாறிக் கொண்டனர். பின்னர் கணினி கண்டு பிடிக்கப்பட்டதும் இந்நிலை மாறியது.

கணினி கண்டு பிடித்த பிறகு நவீன யுகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் இன்டர்நெட், இமெயில் போன்ற வளர்ச்சியும் ஏற்பட்டது. இமெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுடன் அலுவலகப் பணிகளுக்கும் இது பெரிதும் உதவியது.

அதன் பின்னர் யாஹு, கூகுள், ஸ்கைப் போன்ற சாட்டிங் புரோகிராம்களும் தலையெடுக்க ஆரம்பித்தன. முதன் முதல் யாஹு சாட்டிங்க வந்தவுடன் மக்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. இந்த யாஹு சாட்டிங்கில் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் உறவினர்களிடம் கான்பரன்சிங் மூலம் அதாவது வெப் கேமரா மூலம் முகத்தை முகம் பார்த்து பேசும் வசதியால் இதை பயன்படுத்துவோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தொலைபேசியில் பேசி காசை கரியாக்குவதை விட பலமணி நேரம் முகத்தை முகம் பார்த்து பேசினாலும் இந்த சாட்டிங் மூலம் குறைந்த அளவே பணம் செலவானது. இதனால் மக்களிடையே இந்த சாட்டிங் புரோகிராம்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

ஆனால் சில சமூக விரோதிகள் தங்களை யார் என்றும், தங்களின் ஊர், முகவரி எது என்றும் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் பொய்யான தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். (எதற்காக என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களே தங்களிடம் பழகும்போது தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில் இருக்கும்போது, இந்த சாட்டிங் மூலம் ஊர் பேர், முகம் தெரியாத யாரே ஒருவரிடம் தங்களின் உண்மையான முகவரியைத் தந்தால் அதன் மூலம் பிரச்சினை ஏற்படும் என்று பயந்ததால் உண்மையான முகவரியைக் கூறபயந்தனர்.) இதைப் பற்றி கவலைப் படாத ஒருசிலர் மட்டுமே தங்களின் உண்மையான முகவரியை கூறினர்.

இந்த சாட்டிங்கில் போய் பார்த்தால்தான் தெரியும். அவ்வளவும் அசிங்கம். கெட்ட கெட்ட வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் உபயோகித்து பப்ளிக் சாட்டிங் எனப்படும் இடத்தில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு இதை ஒரு பொழுதுபோக்காகவே சிலர் செய்து வருகின்றனர்.

நவீன யுகம் வளர வளர பாதுகாப்பு என்பதற்கே பங்கம் வரும் வகையில் பல புதிய புதிய பிரச்சினைகள் இதன் மூலம் வளருகின்றன.

அப்படி இருந்தும் முகம், ஊர் பேர் தெரியாத, அறிமுகம் அல்லாத சிலரும் (ஆண்கள்) தங்களை பெண்கள் என்றும் 18 வயதுதான் ஆகிறது என்றும் ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றி ஒரு பொழுது போக்குக்காக இப்படி செய்து வந்தனர். இதன் மூலம் பல இன்னல்களை அப்பாவி ஆண்களும், பெண்களும் அனுபவித்தனர்.

அறிமுகமில்லாத நபர்களுடனும், புதிதாக ஏற்படுத்திக் கொள்ளும் நண்பர்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட பின்னர் அதை மறந்து இப்படி பல இன்னல்களில் மாட்டிக் கொண்டு வேதனைப்படுகின்றனர்.

சமீப காலமாக சாட்டிங் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்பர்களாகவும், உறவினர்களாகவும், கணவன் மனைவிகளாகவும் தங்களின் உறவுகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்...

சமீபத்தில் ஒரு வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால் திருச்சியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் நகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஒருவரைக் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்த அந்தப் பெண்ணின் தந்தை இந்தக் காதலுக்கு இளைய மகள் சூர்யாவும் உடந்தை என்று எண்ணியதால் இனிமேல் காதல் கல்யாணம் என்று நீ கூறினாலும் அதற்கு அனுமதியில்லை என்று இளைய மகளிடம் கூறி விட்டார்.

நாளடைவில் இந்த சம்பவத்தை தனது தந்தை மறந்திருப்பார் என்று இளைய மகளும் ஒருவரைக் காதலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை உங்களுடைய சங்காத்தமே வேண்டாம்; ஆளை விடுங்க என்று தனியாக போய் விட்டார்.

தாயுடன் தனியாக வசித்து வந்த சூர்யா தனது காதலை வளர்த்து வந்தார். இதற்கு அவரின் அம்மாவும் உடந்தையாக இருந்தார். அந்தக் காதலன் வேறு யாருமில்லை. இன்டர்நெட் சாட்டிங் மூலமாக வந்த காதலன்தான் அவன்.

சாட்டிங்கில் அறிமுகமான நபர் முதலில் யார் என்றே தெரியாமல் இருந்த சூர்யாவுக்கு பின்னர் அவரின் காதல் தனது மனதை மாற்றியது. இதனால் இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்தது. இப்படி இவர்களின் காதல் கதை போய்க் கொண்டிருக்கும்போது ஒருநாள் காதலன் சாட்டிங்கில் வருவதையே நிறுத்திக் கொண்டான்.

இவளும் பலமுறை முயற்சி செய்தும் ஒருமுறை சாட்டிங்கில் வந்த காதலன், நமது காதலை எனது பெற்றோர் ஏற்கவில்லை. எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதனால் என்னை மறந்து விடு என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

இதனால் மனமுடைந்த சூர்யா கத்தியால் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் தனது அம்மாவிடமும் இதைப் பற்றிக் கூறியதும் அவரும் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டார்.

ரத்தம் வழிந்தோடிய பிறகும் இறக்காததால் வீட்டில் உள்ள கேஸ் இணைப்பை கழற்றி விட்டு சமையல் அறை முழுவதும் கேஸை கசிய விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீக்குச்சியை பற்றவைக்கக் கூட அவரிடம் தெம்பு இல்லை.

அப்பொழுது அவர் இருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவர் காலிங் பெல்லை அழுத்த ஸ்சுட்சில் இருந்து பொறி பறக்கவே வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் உடனே பற்றிக் கொண்டது. பெருத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அருகில் உள்ளவர்கள் வந்து தீயை அணைத்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். கருகிய நிலையில் தாய், மகளையும் மீட்டனர்.

இப்பொழுது இருவருமே மருத்துவமனையில் சீரியஸாக உள்ளனர்.

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிமுகமில்லாதவர்களிடம், புதிதாக நண்பர்களாக ஆகுபவர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்ற முயற்சியைக் கை விட வேண்டும்.

பிறப்பது ஒருமுறைதான் என்றாலும் பிறப்பின் மகத்துவத்தை அறிந்து கொண்டு இதுபோன்ற தவறான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்தாலே இதுபோன்ற இன்னல்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

Read more »

0 comments:

Post a Comment

ஆயிஷா மைந்தன்