சோராபுதீன் ஷேக் போலி என்கெளன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் டிஎஸ்பியான என்.கே. அமீன் மற்றும் முன்னாள் ஏடிஜிபி ஜி.சி.ராய்கர் ஆகியோர் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இதனால் கைது செய்யப்பட்ட குஜராத் அரசுக்கும், முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
அமீனிடம் அமித் ஷாவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளமான தகவல்கள் உள்ளதால் அவர் சிபிஐக்கு அளிக்கப் போகும் தகவல்கள் குஜராத் அரசுக்கு பெரும் தலைவலியைத் தரலாம் என்று தெரிகிறது.
அதே போல குஜராத் சிஐடி பிரிவின் தலைவராக இருந்தபோது சோராபுதீன் என்கெளண்டர் வழக்கை விசாரித்த முன்னாள் ஏஜிடிபி ராய்கரும் சிபிஐ தரப்பு சாட்சியாகியுள்ளார். ஷேக் மற்றும் அவரது மனைவியின் கொலைகளை மறைக்கவும் பொய்யான அறிக்கை தாக்கல் செய்யவும் அமித் ஷா தனக்கு எப்படியெல்லாம் நெருக்கடி தந்தார் என்ற விவரத்தை சிபிஐயிடம் தர உள்ளார்.
அதிகாரி உயிருக்கு ஆபத்து?:
இந்த விசாரணையை மெதுவாக நடத்துமாறு அமித் ஷா உத்தரவிட்டதால் தான் விசாரணையை ராய்கர் இழுத்தடித்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த இழுத்தடிப்பால் கடுப்பானதால் தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே அமீனின் வழக்கறிஞர் ராஜேஷ் மோடி, சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அமீனை மன்னித்துவிடுமாறும், பாதுகாப்பு கருதி அவரை வேறு மாநில சிறைக்கு மாற்றுமாறும் கோரப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2007ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட அமீன், இப்போது அமித் ஷா அடைக்கப்பட்டுள்ள சபர்மதி சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனையே பணம் தான்:
ரியல் எஸ்டேட், கிரனைட் தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பது தொடர்பாக அமித் ஷா- அவரது போலீஸ் கூட்டாளிகள் ஆகியோருக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் போலி என்கெளண்டரில் போய் முடிந்துள்ளதாக சிபிஐ கருதுகிறது. இதன் முழுப் பின்னணியை தோண்டி எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில், தொழிலதிபர்களை மிரட்டி அமைச்சர் அமித் ஷா பணம் பறித்து வந்தார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ முன் வைக்கவுள்ளது.
சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ கொலை செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் 32 முறை டிஎஸ்பி அமீனுடன் அமித் ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அமீனுக்கு ஷா பிறப்பித்த உத்தரவு விவரங்களை சிபிஐயிடம் அவர் விளக்கிவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் அமித் ஷா தன்னிடம் பேசியபோது சில அழைப்புகளை அவர் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார். அமீன் வீட்டில் ரெய்ட் நடத்தி இந்த ஆடியோ சிடியையும் சிபிஐ கைப்பற்றிவிட்டது.
தொகாடியாவின் நண்பர்:
எம்பிபிஎஸ் படித்த டாக்டரான அமீன், குஜராத் போலீசில் சேர்ந்தவர் ஆவார். விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு மிக நெருக்கமானவர். இருவரும் எம்பிபிஎஸ் பேட்ச் மேட்கள் ஆவர்.
இந்த போலி என்கெளண்டர் வழக்கில் இதுவரை 14 குஜராத் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னாள் ஐ.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற சிலர் குஜராத் மதக் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் சிலரும் சிபிஐ-அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறி பல உண்மைகளை சொல்ல வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
வீடியோவில் சிக்கிய ஷாவின் உதவியாளர்கள்:
அமீன், ராய்கர் தவிர அகமதாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமன் படேல், தசரத படேல் ஆகியோரை அமீத் ஷாவின் உதவியாளர்கள் பஜ்பல், அஜய் படேல் ஆகியோர் மிரட்டுவதைக் காட்டும் வீடியோ காட்சிகளையும் முக்கிய ஆதாரமாக சிபிஐ முன் வைத்துள்ளது.
சோராபுதீன் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாக்குமூலம் தர வேண்டும் என்று அமித் ஷா சார்பில் இவர்கள் படேல்களை மிரட்டினர். இதை அவர்கள் ரகசிய கேமராவில் பதிவு செய்து சிபிஐயிடம் தந்துவிட்டனர்.
மொத்தத்தில் அமீத் ஷாவை சுற்றி சிபிஐ மிகக் கச்சிதமாக வலையைப் பின்னிவிட்டது. இதிலிருந்து ஷா தப்பிக்க இயலாது என்று கூறப்படுகிறது.
ஆதாரத்தை அழித்த ஐபிஎஸ் அதிகாரி:
இதற்கிடையே சோராபுதீன் போலி என்கெளண்டர் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா பேசிய விவரங்கள் அடங்கிய சிடியில் இருந்த அமித் ஷாவின் பேச்சுக்களை அழித்த மூத்த போலீஸ் அதிகாரி ஓ.பி.மாத்தூரை சிபிஐ கைது செய்யும் என்று தெரிகிறது.
இந்த சிடியை சிபிஐ கோரியபோது அதிலிருந்த ஷாவின் பேச்சுக்களை அழித்துவிட்டுத் தந்தார் மாத்தூர். ஆனால், இன்னொரு அதிகாரியான குஜராத் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ரஜ்னீஷ் ராய், இந்த முழு உரையாடல்கள் அடங்கிய சிடியை சிபிஐயிடம் தந்து உதவினார். இல்லாவிட்டால் அமித் ஷா எளிதாக தப்பியிருப்பார் என்று சிபிஐ தெரிவித்துள்ளனர்.
யார் சொல்லி உரையாடல்களை மாத்தூர் அழித்தார் என்று அவரிடம் சிபிஐ விசாரி்க்கவுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
இந்த போலி என்கெளண்டர் விவகாரம் குறித்து குஜராத் சிஐடி போலீசார் விசாரித்தபோது அதன் ஏடிஜிபியாக இருந்தவர் மாத்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமித் ஷாவையும் என்கெளண்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால், அப்போது சிஐடி பிரிவின் டிஐஜியாக இருந்த ரஜ்னீஷ் ராய், நேர்மையாக செயல்பட்டு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்ததோடு, போலி என்கெளண்டர் நடத்திய ஐபிஎஸ் அதிகாரிகளான வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகியோரை கைதும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வன்சாராவும் தமிழகத்தைச் சேர்ந்த குஜராத் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பாண்டியனும் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமான அதிகாரிகள் ஆவர். இப்போது இவர்கள் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களை காப்பாற்ற முயன்ற மாத்தூர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக இப்போது மாநில அரசின் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமித் ஷாவுக்காக ஆஜராகும் ஜேத்மலானி:
இதற்கிடையே அமீத் ஷாவை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்தது. நேற்று இந்த மனு மீது விசாரணை நடந்த போது அமீத் ஷா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகே ஷாவிடம் விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார்.
ஆனால், ஜேத்மலானியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. வரும் 28, 29, 30ம் தேதிகளில் ஏதாவது 2 நாட்கள் சிறையி்ல் வைத்தே அமீத் ஷாவிடம் விசாரிக்கலாம் என்று சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.