Monday, 26 July 2010

15 நாள் நீதிமன்றக் காவல்



சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி உள்ள குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவரை கைது செய்துள்ளது.

15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தம்மை பிணையில் விடுவிக்கக்கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வருகிற 28 முதல் 30 ஆம் தேதிக்குள் சிபிஐ அதிகாரிகள், சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்று அகமதாபாத் கூடுதல் தலைமை ஜுடிசிய மாஜிஸ்திரேட் ரவால் இன்று அனுமதி அளித்தார்.

ஷா தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான காவல்துறை முன்னாள் டிஎஸ்பி அமின் அப்ரூவராக மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.



சிபிஐயை தவறாக பயன்படுத்தவில்லை-பிரதமர்:

இந் நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,

குஜராத் அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிபிஐ தன் கடமையை செய்துள்ளது. சிபிஐயை நாங்கள் தவறாகப் பயன்படுத்தவில்லை.

சோராபுதீன் என்கெளண்டர் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வந்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவேத் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படிதான் சிபிஐ செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அமைதியாகவும், பயனுள்ள வகையிலும் நடைபெறும் என்று நம்புகிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எல்லா பிரச்சனைகள் மீதும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
Read more »

0 comments:

Post a Comment

ஆயிஷா மைந்தன்